கடவுளுக்குரிய பாடல்களுக்கு ஒரு முன்னுரை
- வாரன் W வியர்ஸ்பி
(Tamil Translation of “Prayer, Praise & Promises: A Daily Walk Through the Psalms” originally written by Warren W. Wiersbe)
திருப்பாடல்கள் 1: 1 - 6
1. நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்;
3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.
4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.
5 பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்; பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார்.
6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.
உங்கள் திருச்சபையின் பாட்டு புத்தகத்தின் முன்னுரையை நீங்கள் என்றாவது வாசித்ததுண்டா? மிகச்சிலரே அதை வாசிப்பதுண்டு. இந்த முதலாம் திருப்பாடல், கடவுளுக்குரிய பாடல்களுக்கான புத்தகத்தின் (திருப்பாடல்கள்/ சங்கீதம்) முன்னுரையாக அமைந்துள்ளது. நாம் பலதடவை பயன்படுத்தும் “நற்பேறு பெற்றவர்” (ஆசி பெற்றவர்/ பாக்கியவான்/ புண்ணியவான்) என்ற சொல்லைக் கொண்டே இத்திருப்பாடல் துவங்குகிறது. கடவுள் எந்த ஒரு நிகழ்ச்சிகளையோ இயக்கங்களையோ ஆசிர்வதிப்பதாக திருமறையில் எங்கேயும் சொல்லப்படவில்லை. மாறாக, கடவுள் தனிநபர்களை ஆசிர்வதிப்பதாக திருமறை நமக்கு போதிக்கிறது. மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, கடவுள் ஆபிரகாமை ஆசிர்வதித்தார். நாமும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்போம் என்பதாலேயே, நம்மையும் அவர் ஆசீர்வதிக்கின்றார்.
நீங்கள் எதில் மகிழ்ச்சி காண்கிறீர்களோ, அதுவே உங்கள் வாழ்வை இயக்கும். ஆகவே, நீங்கள் எதில் ஆனந்தம் அடைகிறீர்கள் என்பதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். நற்பேறு பெற்றவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சி அடைகிறார் (வசனம் 2). அவர் கடவுளின் வார்த்தைகளில் மிகவும் ஆனந்தம் கொண்டு, அதைப்பற்றியே நாளெல்லாம் தியானிக்கிறார். நம் உடலுக்கு செரிமானம் எப்படியோ, அப்படியே நம் உள்ளத்திற்கு (ஆத்மாவிற்கு) தியானம் அமைகிறது. தியானம் என்றால் கடவுளின் வார்த்தையை உள்வாங்கி உணர்ந்து கொள்வது என்று பொருள்படும்.
நற்பேறு பெற்ற நபர் ஒரு மரம் போன்றவர் (வசனம் 3). மரத்திற்கு வேர்கள் இருக்கும். உங்கள் வாழ்வின் மிக முக்கியமான பகுதியாக உங்களுடைய வேர்களின் அமைப்பு உள்ளது. பதர்களை போலிருக்கும் பொல்லாத மனிதர்களை போல நீங்கள் இருக்க வேண்டாம் (வசனம் 4). பதர்களுக்கு வேர்கள் கிடையாது. ஒவ்வொரு முறை காற்றடிக்கும் போதும் அது பறந்தோடி போகிறது. உங்கள் வளர்ச்சிக்கான உணவை உங்களுடைய வேர்களின் அமைப்பு தீர்மானிக்கிறது. எனவே அது மிக முக்கியம். மேலும், புயல் வரும்போதும், காற்றடிக்க துவங்கும் போதும், உங்களுடைய நிலைநிற்கும் திறனையும், உங்களுடைய வலிமையையும், உங்கள் வேரே முடிவுசெய்கிறது.
மனிதர்களால் உங்களுடைய வேர்களின் அமைப்பை பார்க்க முடியாது. ஆனால், கடவுளால் பார்க்க முடியும். கடவுளின் வார்த்தைகளை கொண்டு வேண்டுதல் செய்வதும், தியானிப்பதும் உங்களுடைய வேர்கள் ஆழமாக உள்ளே சென்று கடவுளின் அன்பை அடைய செய்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
கடவுள் தமது பிள்ளைகளுக்கு ஆசி வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறார். ஆனால், அவருடைய ஆசிகளுக்கு நாம் தயாராகும் வகையில், அவர் நமக்கு தந்திருக்கும் திருவார்த்தைகளை முதலில் நம்முடையதாக்கி கொள்ளவேண்டும். கடவுளின் வார்த்தைகளில் மகிழ்ச்சி அடையுங்கள்; அதை உண்ணுங்கள். வார்த்தையை அதிகம் வாசியுங்கள். சிலசமயங்களில் மட்டுமல்ல, அதை எப்போதும் தொடர்ந்து தியானித்து கொண்டிருங்கள். உங்கள் ஆவிக்கான சத்து வார்த்தையின் மூலம் கிடைக்குமாறு செய்யுங்கள். கடவுள் உங்களுக்கு வலிமையும் நிலைநிற்கும் திறனையும் தந்து ஆசீர்வதிப்பார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment