Saturday, May 6, 2017

நாவின் தீமைகள்


நாவின்   தீமைகள்

Synopsis from the books of Derek Prince
Translated in Tamil by Claudius Arthur

(நீதி 18 : 21) மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும், நாவின் சரியான உபயோகம் ஜீவனைத்தரும், தவறான உபயோகம் மரணத்தை விளைவிக்கும். நாவை தீட்டுப்படுத்துகிற சில குறிப்பிட்ட தீமைகளை கவனிப்போம்.

தீமை 1: மிகுதியான பேச்சு (Excessive  Talking)

(நீதி 10 : 19) சொற்களின் மிகுதியில் பாவமில்லாமல் போகாது. தன் உதடுகளை அடக்குகிறவனே புத்திமான்.

            நீங்கள்  அதிகமாக பேசும்போது, சில தேவையில்லாத வார்த்தைகளை தவிர்க்க முடியாது. வார்த்தைகளை அடக்குகிறவனே புத்திமான்.

            இயேசுவுக்கு என்னை முழுவதுமாய் அர்ப்பணிக்கிறேன் (All to Jesus I Surrender) என்ற பாட்டை வாயினால் பயபக்தியுடன் பாடிவிட்டு, நம் வாழ்க்கையில் உண்மையான அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் அது முரணானது.

(பிர  5 : 3b) வார்த்தைகளின் திரட்சியினால், மூடனுடைய சத்தம் பிறக்கும்.

            ஒருவன் பேசிக்கொண்டேயிருக்கும் போது, அவனுடைய மூடத்தனம் வெளிப்படுகிறது. அதற்கு மூலக்காரணம், நிம்மதியும் இளைப்பாறுதலும் இல்லாமையேயாகும்.

(யாக் 3 : 8)       நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. அது அடங்காத பொல்லாங்குள்ளதும், சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.

            ஒருவனுடைய பாரம்பரிய கலாச்சாரமும் பழக்க வழக்கமும் அவன் இருதயத்தில் நிரம்பியிருக்கிறபடியால், அவன் அமைதியின்றி பேசிக்கொண்டேயிருப்பான். அவன் பேசுவதைக் கேட்கின்ற நமக்கு, தலை சுற்றுவதுப்போல் ர் உணர்வு உண்டாகும். அவனுடைய அதிகமான அர்த்தமற்ற பேச்சிற்கு அடிப்படைக்காரணம், அவனுடைய இருதயத்தில் அமைதியில்லாமல் இருப்பதே.

தீமை 2: வீணான வார்த்தை / அஜாக்கிரதையான வார்த்தை .
Idle  or Careless Words .

(மத் 12:36)  மனுஷன் பேசும்  வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும்.

            நாம் பேசும் ஒவ்வொரு வீணான வார்த்தைக்கும், கணக்கு ஒப்புவிக்கவேண்டும். அஜாக்கிரதையான வார்த்தை, உண்மையில்லாத வார்த்தை. அர்த்தமற்ற வார்த்தை, ஆயத்தப்படுத்தாத வார்த்தை நம் வாழ்க்கைக்கு உபயோகமில்லாத வார்த்தை, இவை யாவுக்கும் நாம் கணக்கொப்புவித்தேயாகவேண்டும்.

(மத் 5:37) உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள். இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். இது வியக்கத்தக்க வசனம், நாம்  நினைப்பதற்கு மிஞ்சி, பெரிதுப்படுத்தி, அதிக உறுதிப்படுத்தி, தேவைக்கு மிஞ்சி பேசுவது பிசாசினால் வருவது.

            ஆசையினால், அர்த்தமில்லாததை பேச வேண்டாம். பிரயோஜனமில்லாததை பேசவேண்டாம். தேவையில்லாத நேரத்தில் பேச வேண்டாம். நமக்கு தகாததை பேச வேண்டாம். இவைகளை ஜாக்கிரதையாய் கடைப்பிடித்தால். உங்கள் வாழ்க்கை மாறும் நீங்கள் வித்தியாசமான மனுஷனாய் மாறுவீர்கள். மேம்பாடான மனுஷராய் மாறுவீர்கள்.

தீமை 3: கோள்  சொல்லுதல் (Gossip)

(லேவி 19:16)  உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்  சொல்லித்திரியாயாக.

            கோள்  சொல்லுதல் என்றால். வீணான, பொய்யான, அளவுக்கு அதிகமான, அபாண்டமான வார்த்தைகளை பேசுவதுதான். கிரேக்க மொழியில், புதிய ஏற்பாட்டில் சாத்தான் என்பதற்கு கோள்  சொல்லுகிறவன் (கோள்மூட்டி) என்று அர்த்தம். இதுதான் வேதத்தில் பிசாசைக் குறித்த மூல அர்த்தம், நீங்கள்  மற்றவர்களைப் பற்றி புறங்கூறி கோள்   சொல்வதன் முலம் பிசாசுக்கு ஊழியம் செய்கிறீர்கள். நீங்கள்  இயேசுவின்  பிரதிநிதிகள். ஆகவே, நாம் புறங்கூறாமல் ஜாக்கிரதையாயிருப்பதுமன்றி, புறங்கூறுத்தலுக்கு, செவிக்கொடாமலிருப்பதும் நம் பொறுப்பு.

(நீதி 18 : 8) கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும். ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.

            இது மனித சுபாவம் என்பது உண்மை. நாம் மற்றவர்களுடைய தீய காரியங்களை கேட்கும்போதும், அவர்களை நாம் தவறான வெளிச்சத்திலே காணும்போதும், இயற்கையாகவே நம் மனம் மகிழ்ச்சி அடைகிறது.

கோள்காரனின் வார்த்தைகள் விளையாட்டுப் போல் இருந்தாலும் அது விஷமாயிருப்பதால் அதை ஏற்காதபடி ஜாக்கிரதையாயிருங்கள். அது தித்திப்பாயிருந்தாலும் விஷமே. நீங்கள்  அதை விருப்பமாய் ஏற்றுக் கொள்ளும் போது, அந்த வார்த்தைகள் நம் வாழ்க்கையையே விஷமாக மாற்றும்.

(நீதி 20:19) தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான். ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.

            பாருங்கள். இந்த தீமைகள் எப்படி ஒன்றுகொன்று இணைந்திருக்கிறது. தூற்றிக்கொண்டு திரிகிறவனுக்கு நீ செவிக் கொடுப்பாயானால். நீயும் அதில் பங்காளியாவாய்.
            திருட்டுப் பொருளை பெற்றுக் கொண்டாலோ அல்லது வாங்கினாலோ, சட்டப்படி நீயும் குற்றவாளி. அதுப்போல தூற்றுபவனை உற்சாகப்படுத்தி அவன் வார்த்தைகளை ரசிக்கும் போது நீயும் அதில் பங்காகிறாய்.

(சங் 15 :1-3)     கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதார சத்தியத்தை பேசுகிறவன் தானே. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்கு செய்யாமலும். தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் பண்ணுவதற்கு மூன்று காரியங்களை நாம் செய்ய வேண்டும்.

1. உத்தமனாய் நடக்க வேண்டும்.
2. நீதியை நடப்பிக்க வேண்டும்.
3. மனதார சத்தியத்தை பேச வேண்டும்.

நாம் செய்யத்தகாத மூன்று காரியங்கள் :

1.     நம் நாவினால் புறங்கூறாமலும்
2.   தன்  தோழனுக்கு தீங்கு செய்யாமலும்.
3.   தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை, எடுக்காமலும் கேட்காமலும் இருக்க வேண்டும்.

            புறங்கூறுதலை கேட்க கூடாதது மாத்திரமல்ல, புறங்கூறுகிறவர்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இவ்வாறு புறங்கூறுதல், அநேக உறவுகளைப் பிரித்துவிடுகிறது.

தீமை 4: பொய்பேசுதல் - Lying
                       
            நாம் பேசும்போது சரியான, குறிப்பான, உண்மையான வார்த்தையை உபயோகிக்க வேண்டும்.

            ஆங்கிலத்தில் “Elastically Speaking “ என்பர். சில சுவிசேஷகர்கள், கூட்டத்திற்கு 200 பேர் வந்திருந்தால். அதை சுமார் 500 பேர் என்று அறிவிப்பார்கள். இது மிகைப்படுத்துவதா? அல்லது பொய்யா? இது பொய்தான். நாம் ஒவ்வொருவரும். பொய்யை கூறாமல் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

(நீதி 6:16-19) ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார். ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய் நாவு, குற்ற மற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடும் கால், அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டு பண்ணுதல் ஆகிய இவைகளே.
தேவன் வெறுக்கிற ஏழு காரியங்களில் மூன்று காரியங்கள் நாவைப்பற்றினது. பொய் நாவு, பொய் சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் - இதிலும் இரண்டு பொய்யை சார்ந்தது.

(நீதி 12:22)       பொய் உதடுகள். கர்த்தருக்கு அருவருப்பானவைகள். உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.  உண்மை அவருக்குப் பிரியம். பொய் உதடு அவருக்கு அருவருப்பு. பொய்க்கும், உண்மைக்கும் நடுவில் ஒன்றுமேயில்லை. உண்மை இல்லாவிட்டால் அதுப் பொய்.

            நம்முடைய பிரச்சனையே நம் வாழ்க்கையில் வரும் சில இருண்ட பாதைகள். அதன் மூலக்காரணம், பிசாசினிடமிருந்து வரும் பொய். அது தேவனுடைய வார்த்தைகளில் காணப்படுபவைகளல்ல. அந்த பொய்யான எண்ணத்தை, இயேசுவின் வார்த்தைகளாலேயே சரிக்கட்ட முடியும். இயேசு, அவர் வாழ்ந்த காலத்தில் பக்தி வைராக்கியமுள்ள மத தலைவர்களிடம் கூறியது:

(யோ 8:44) நீங்கள்  உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள். உங்கள் பிதாவினுடைய இச்சையின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள். அவன் ஆதி முதற் கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். சத்தியம் அவனிடத்தில் இல்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை. அவன் பொய்யனும், பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

            பொய்யைக்குறித்து மிக பயங்கரமான, அதி முக்கியமான காரியமென்னவென்றால்பொய்யை அடக்கி கீழ்ப்படுத்தாவிட்டால், முடிவு மரணமே”.

(வெளி 21:8) பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபச்சாரக்காரரும். சூனியக்காரரும், விக்கிரக ஆராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

            பொய்யின் தீமை குணமாக்க முடியாத தீமை. தப்பிப்பது அரிது. ஏனெனில் அதன் முடிவு இரண்டாம் மரணம்.

(வெளி 22:15)  நாய்களும், சூனியக்காரரும், விபச்சாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரக ஆராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பேயிருப்பார்கள். ஆகவே, தீர்மானியுங்கள், நான் இந்த பொய்யின் தீமையிலிருந்து விடுதலையாவேனா? அல்லது என் ஆத்துமாவை இழப்பேனா?

            ஆரம்பத்திலேயே தடுத்து, நிறுத்தி, குணப்படாவிட்டால், பொய்யின் தீமை உங்களுக்கு மரணத்தை உண்டாக்கும்.



தீமை 5: பெருமை பேசும் வாய் - Flattery

(சங் 12:1-3) இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள். அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள் ; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள். இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.

            மனித இனத்திலே சன்மார்க்க நெறி குறைந்து வருகிறது. பக்தியுள்ள மனுஷனைக் காண்பது அரிதாயிருக்கிறது. வேதத்தின் அடிப்படையில், தேவன் பெருமை பேசுகிறவர்கள்மேல் நியாயத் தீர்ப்பை கட்டளையிடுகிறார்.

(நீதி 26:28) கள்ள நாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும். இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டுப் பண்ணும் என்று நாம் எச்சரிக்கப்படுகிறோம். பெருமையானவைகளை நாம் பேசினாலும், கேட்டாலும், அது நமக்கு அழிவைத்தரும்.

(நீதி 29:5) பிறனை முகஸ்துதி செய்கிறவன் அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான். பெருமையானவைகளை பேசும் மக்களில் பெரும்பாலானோர்  உண்மையாய் இருப்பதில்லை. அநேக நேரங்களில் தேவ கிருபையில்லாமல் நம் கால்கள் பெருமையின் வலையிலே சிக்கிக் கொள்வதுண்டு. தேவனுடைய சித்தத்தை விட்டு, சில காரியங்களில் உலகப் பிரகாரமாக ஒத்துப்போவதும், வெளி உலகோடு உறவுக் கொள்வதும் உண்டு, இதனை நாம் தவிர்ப்பது அவசியம்.

தீமை 6: அவசரப் பேச்சு - Hastiness in Speach

(நீதி 29 : 20) தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.

                        ஒருவன் பேசும்போது, வார்த்தையில் பதறுகிறவனாயிருந்தால் மூடனிலும் மோசமானவனாக கருதப்படுவான். இது உண்மையான வார்த்தை. ஏனெனில், வேதாகமம் மூடனைக் குறித்து ஒரு நல்ல காரியமும் சொல்லவில்லை .

(எண்  20:7-12)  கர்த்தர் மோசேயை நோக்கிகன்மலையைப்  பார்த்துப் பேசுங்கள்என்றார். ஆனால் மோசே இஸ்ரேல் மக்கள் மேல் கோபமூண்டவராகி கலகக்காரரே கேளுங்கள்;  உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப் பண்ணுவோமோ?என்று சொல்லி, தன்  கையை ஓங்கி கன்மலையைத்  தன் கோலினால் இரண்டு தரம் அடித்தான். இந்த பதற்றமான வார்த்தைகள் இஸ்ரவேல் மக்களை வாக்குத்தத்தம் பண்ணின தேசத்திற்குள் அழைத்துச்செல்ல தடையாயிற்று.

(சங்106:32,33) மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்கு கடுங்கோபம் மூட்டினார்கள். அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது. அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினத்தினாலே, தன்  உதடுகளினால் பதறிப் பேசினான்.

            இந்த பதற்றமான வார்த்தைகள் அநேக உரிமைகளையும், ஆசீர்வாதங்களையும் இழக்கச் செய்தது. ஆவிக்குரியரீதியிலே, நாம் பதற்றமாய் பேசாதபடிக்கு, அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருப்போமாக.
நாவின் தீமைகளைத் தவிர்க்கும் வழிகள்
Steps to Rectification

வழி  1: உன்னுடைய பிரச்சனைகளுக்கு தகுதியான, சரியான பெயரைக் கொடு. “பாவம்”.

            நாம் உண்மையாயிருக்கவேண்டியது அவசியம், நாம் பாவத்திற்கு மெருகூட்டி, மனோரீதியான பெயர் சூட்டி (Psychological Terminology), மூடி மறைத்து, சாக்குப்போக்குச் சொல்லி, ஒன்றும் அறியாததுப்போல் காட்டி, நடக்காததுப் போல் பாவனைச் செய்தாலும், பிரயோஜனமில்லை. பாவம் பாவமே. உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும்.
           
நாம் உண்மையைக் கடைப்பிடிப்போமானால், தேவன் நம்மோடு இடைப்பட்டு, நமக்கு உதவிச் செய்வார். நாம் பாவத்தை மூடி மறைத்து  பிரச்சனையை திசைத்திருப்பி விட்டால், தேவன் நமக்கு உதவவே முடியாது. உதவவும் மாட்டார்.

            சில சமயங்களில், “தேவனே. ஏன் எனக்கு உதவவில்லை.” என்று கேட்டால். “நீ உண்மையாயிருக்க நான் காத்திருக்கிறேன். உன்னிடத்திலும், என்னிடத்திலும் நீ உண்மையைக் காத்துக்கொள்என்பார்.

            இதுவே முதலும் முக்கியமானதான வழியுமாகும். இந்த வழியை பின்பற்றினால் உன் பாதை செவ்வையாகும். ஆகையால் உன் பிரச்சனைகளை சரியான பெயராலே அழைப்பாயாக. பெரும்பாலும் உன் பிரச்சனைகளின் சரியான பெயர்பாவம்” அல்லதுபாவத்தின் விளைவு”.

            விசுவாசிகள் தங்கள் நாவினால் உபயோகிக்கும் தவறான வார்த்தைகளை யதேச்சையாகவும் மேற்போக்காகவும் காட்டி, திசைத் திருப்புகிறார்கள். நாம் பேசுவதில் தவறில்லை, குறையில்லை என்று நினைத்தாலும், அது தீமையானது என்று தேவன் சொல்லுகிறார். பார்க்கப்போனால், நீயே உன் முடிவை, உன் பேச்சிலே நிர்ணயம் பண்ணுகிறாய்.

(மத் 12:37) இயேசு கூறியதாவதுஉன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்”, ஆகவே, இதை அற்பமாக எண்ணாதே.

            எனக்குப் பாவம்தான் பிரச்சனை என்பதை உணர்ந்து, இயேசுவிடம் வரும்போது, அவர் உனக்கு நிச்சயமாகவே உதவுவார்.

வழி 2 : பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பையும், சுத்திகரிப்பையும் பெற்றுக்கொள்.

(1யோ 1:7-9) அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிப்போம். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம், சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச்சுத்திகரிக்கும். நமக்குப்  பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

            எல்லாவற்றிலும் உண்மையாயிருப்பது அவசியம். இயேசுவின் இரத்தம் இருளிலே சுத்திகரிப்பதில்லை. நாம் ஒளி(இயேசு)யினிடம் வந்தால்தான், இயேசுவின் இரத்தத்தின் சுத்திகரிப்பை பெறமுடியும். நாம் ஒளியிலே நடப்போமானால், இயேசுவின் இரத்தம் நம்மை சுத்தமாக்கி, பாவத்திலிருந்து காத்து, தொடர்ந்து சுத்திகரித்துக் கொண்டேயிருக்கும். உங்களுக்கு விளக்கிக் காட்டிய உண்மையான பிரச்சனையாகிய பாவம், நமக்குள் இல்லை என்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நாம் ஒளியிலே நடக்கவில்லை. நாம் இன்னும் இருளிலே இருக்கிறடியால் தேவனுடைய அனுக்கிரகம் நம்மில் செயல்படாது.

            நாம் மற்றறொரு கோணத்தில் நோக்குவோமானால், பாவங்களை அறிக்கையிட்டு, ஒளியினிடத்தில் வந்து, நமது பிரச்சனையின் உச்ச வரம்பையும், சரியான இயல்பையும், ஒத்துக்கொண்டால், அப்பொழுது தேவன் நமது பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மை சுத்திகரிப்பதற்கு, அவர் உண்மையும், நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

            அவர் உண்மையுள்ளவர்; ஏனெனில் வாக்குப்பண்ணினவர் வாக்குத்தத்தத்தை  காத்துக்கொள்வார். அவர் நீதியுள்ளவர்; ஏனெனில் அவர் ஏற்கெனவே நமது பாவத்திற்கு கிரயத்தை சிலுவையிலே செலுத்தி நம்மை மீட்டுவிட்டார்.

            தேவன் நம்மை மீட்டு விட்டபடியால் நம்மை பூரணமாய் சுத்திகரிப்பார். நம்முடைய இருதயமே, நம் வாழ்வில் நல்ல ஊற்றாயிருக்கிறது. நம்முடைய இருதயம் முற்றிலும் சுத்தமாக்கபடும்போது நாம் திரும்ப திரும்ப அதே பாவத்தை செய்யமுடியாது.

            நம் இருதயம் சுத்திகரிக்கப்பட்டால், எந்த விதமான பாவ பிரச்சனையும் இருக்காது. நம் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளை நம் இருதயமே தீர்மானிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

            சுத்தமான இருதயம் அசுத்தமான வார்த்தைகளை உச்சரிக்காது. அசுத்தமான வார்த்தைகள் இருதயத்தின் அசுத்தத்தை சுட்டிக்காட்டும்.

            முதலாவதாக, நாம் ஒளியினிடத்திற்கு வந்து, பாவங்களை அறிக்கையிட்டு, பாவ பிரச்சனைகளோடு, தேவனிடத்திற்குத் திரும்பும் போது, தேவன் நம்மை மன்னிக்க உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். பாதிக்கப்பட்ட கடந்தகாலம் அழிக்கப்பட்டு. நீ செய்யக்கூடாது  என்று விரும்பிய காரியங்களும் சுத்திகரிக்கப்படும்.

            இரண்டவதாக, தேவன் உன் இருதயத்தை சுத்திகரிக்கும் போது, சுத்தமும் தூய்மையுமான இருதயத்திலிருந்து உன் உதடுகளின் வழியாய் வெளிப்படும் வார்த்தைகள் சுத்தமும் தூய்மையுமாய் இருக்கும். உன் இருதயம் தேவனை மகிமைப்படுத்தினால் உன் உதடுகளும் தேவனை மகிமைப்படுத்தும்.

வழி 3 : பாவத்தை வெறுத்து தேவனுக்குக் கீழ்ப்படி.

            பாவத்திற்குஇல்லைஎன்றும், தேவனுக்குஆம்என்றும் சொல். இரண்டையும் செய்ய பழகிக் கொள்ள வேண்டும். நீ தேவனுக்குஆம்என்று சொல்லாமல். பாவத்திற்குஇல்லை’ என்று சொல்லும் போது, நீ வெற்றிடத்திலிருந்து மறுபடியும் அதே பிரச்சனையில் சிக்கிக்கொள்வாய். நீ தேவனுக்கு இணங்காமல் பாவத்திற்குத் தப்ப முடியாது.

(ரோம 6:12-13) நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்கு கீழ்ப்படியதக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள்  உங்கள் அவயங்களை (நாவை) அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை (நாவை) நீதிக்கு ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.

            பாவம் உன்னை எதிர்நோக்கும்போது, “நான் உனக்கு இணங்க மாட்டேன். என் நாவையும் உனக்குக் கீழ்ப்படுத்தமாட்டேன்”. என்று சொல். பின்பு தேவனிடமாய் திரும்பிதேவனே ! என் நாவை உமக்குக் கீழ்ப்படுத்துகிறேன். என்னால் கட்டுப்படுத்த முடியாத நாவை, நீர் கட்டுப்படுத்தும்என்று சொல்.

(யாக் 3:8) நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. அது அடங்காத, பொல்லாங்குள்ளதும் , சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.

            நீ உன் நாவை அடக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என்ற உண்மையை ஒத்துக்கொள். ஒரே ஒரு வல்லமைதான் உன் நாவைக் கட்டுப்படுத்த முடியும். அதுதான் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் தேவ வல்லமை.

      நாவின் தீமைகளைத் தவிர்க்கும் மூன்று வழிகளையும் சுருக்கமாக கவனிப்போம். முதலாவது, உன்னுடைய பிரச்சனையை அதின் சரியான பெயரில் “பாவம்‘’ என்று அழை. இரண்டாவது, பாவத்தை தேவனிடத்தில் அறிக்கையிட்டு, மன்னிப்பையும் சுத்திகரிப்பையும் பெற்றுக்கொள்.             மூன்றாவது, பாவத்திற்கு ஒப்புக்கொடாமல் உன்னை தேவனுக்கென்று அர்ப்பணித்து விடு.

உனக்குக் கட்டுப்படாத உன் நாவை
பரிசுத்த ஆவியாகிய தேவனிடத்தில் ஒப்புக்கொடு! கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக!

----+----


(டெரெக் பிரின்ஸ் அவர்கள் எழுதிய புத்தகச்சுருக்கம்.
தமிழில் மொழியாக்கம் கிளாடியஸ் ஆர்த்தர் அவர்கள்.)

No comments:

Post a Comment