Thursday, January 28, 2016

சடங்குகள் வேண்டாம். நம்பிக்கையே போதும். (திருச்சபை சீர்திருத்த நாள்- Church Reformation Day - Message by YesuRasigan on 31 Oct 2015)


இன்று, அக்டோபர் 31ம் தேதி. ஒவ்வொரு கிறிஸ்து தொண்டர்களுக்கும் ஓர் ஒப்பற்ற விடுதலையின் நினைவு நாள்.

நேரிடையாய் ஒருவர் செயலாற்றும்போது இணைப்பாளருக்கு இடமில்லை. வாக்குறுதி அருளியபோது, கடவுள் ஒருவரே நேரிடையாய்ச் செயல்பட்டார். (கலாத்தியர் 3 :20).

அதுவும், தம் ஒரே மகன், இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல், நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புக் கூர்ந்தார். (யோவான் நற்செய்தி 3 :16). ஆனால், தீயோன் திருச்சபை வழியாகவே கடவுளின் அன்பை கொச்சைப்படுத்தும் வகையில், சட்டங்களையும், சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் உருவாக்கி, விசுவாசிகளின் மனக்கண்களை இருட்டடிப்பு செய்தான்.

உண்மையில், மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது. (உரோமையர் 9 :16). ஏனெனில், "இயேசுவே ஆண்டவர்" என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். (உரோமையர் 10 :9).

ஆம், இதே நாள் கி.பி. 1517 ஆம் ஆண்டு, கடவுளின் அன்பையும், அவர் நமக்கு அருளிய மீட்பையும், எல்லையற்ற ஆசிகளையும், அளவற்ற கிருபையையும், ஒப்பற்ற விசுவாசத்தையும் மூடிமறைக்கும் சடங்குகளுக்கும், தேவையற்ற கொள்கைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், இடைத்தரகர்களுக்கும், மதமாச்சரியங்களுக்கும் எதிராக மார்ட்டின் லூதர் அடிகளார், மாபெரும் விசுவாச அறிக்கையை வெளியிட்ட நாள் இதுவே.

இந்த நன்னாளில், நாம் நமது நம்பிக்கையை மறுஅறிக்கை செய்வோம்.

செயல்களால் நாம் கடவுள் முன் ஏற்புடையவர் ஆவதில்லை. கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் தான் நாம் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறோம். நாம் நமது நம்பிக்கையால் நேர்மையுடையோராகி, வாழ்வடைகிறோம். (கலாத்தியர் 3 : 11 & 26 | ஆபக்கூக்கு 2:4)

நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து நமது உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே நமது வாழ்வுக்கு, ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! (எபேசியர் 3 :17)

ஆம். ஆமென். அப்படியே ஆகட்டும்.






Inspiration from: R. Stanley from the Daily devitional book called 'Better Everyday'.

No comments:

Post a Comment