Saturday, January 30, 2016

ஆட்டிடையனாய் இருந்து அரசனாய் உயர்ந்த தாவீது, பாடி அனுபவித்த, அனுபவித்து பாடிய இருபத்திமூன்றாம் திருப்பாடல் (23ஆம் சங்கீதம், விரிவான தமிழ் மொழிப்பெயர்ப்பு - Amplified Tamil Version of Psalm 23)



















ஆண்டவர்தான் எனக்கு உணவளித்து, வழிக்காட்டி காப்பாற்றும் என்னுடைய மேய்ப்பராக இருக்கின்றார். எனவே எனக்கு ஒரு குறையும் கிடையாது.


அவர் என்னை பசுமையான, புதிதாக அரும்பியிருக்கும் புல்வெளியில் படுக்க வைத்து இளைப்பாற செய்கிறார். அவர் என்னை ஆடாமல், அசையாமல், ஓசையின்றி, அமர்ந்திருக்கும் நீர்நிலைகளுக்கு அழைத்து செல்கிறார்.


அவர் என் வாழ்வை என் ஆன்மாவை புதிதாக்கி, அதற்கு புத்துணர்வும், புத்துயிரும், புதுத்தெம்பும் கொடுக்கிறார். எனது உழைப்பின் பொருட்டல்ல, எனது வேண்டுதலின் பொருட்டல்ல, அவர் தம்முடைய நற்பெயரின் பொருட்டே என்னை நேர்மையான, நீதியான, சரியான பாதைகளில் நடத்தி செல்கிறார்.


ஆமாம். நான் கதிரொளி படாத, இருள்சூழ்ந்த, சாவின் நிழல் படிந்திருக்கும், ஆழமான பள்ளத்தாக்கு வழியாக கடந்து வர நேரிட்டாலும், நீர் எப்போதும் என் கூடவே இருப்பதால், எப்பேர்பட்ட தீங்கிற்கும் அச்சம் கொள்ளவோ, கலக்கம் அடையவோ மாட்டேன். என்னை பாதுகாக்கும் உமது கோலும், வழிக்காட்டும் உமது தடியும், என்னை ஆற்றி தேற்றுகிறது.


என்னை பகைப்பவரின் வெறுப்பவரின் கண்கள் காணும் வகையில், நீர் எனக்கு மாபெரும் விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர். அங்கே என்னை பெருமைப்படுத்தும் வகையில், நறுமண தைலத்தை என் தலையில் ஊற்றி எனக்கு அருட்பொழிவு செய்கின்றீர். எனது பாத்திரங்களும் கோப்பைகளும் உமது ஆசிகளால் நிரம்பி வழிந்தோடுகிறது.


உண்மையாகவே, என் வாழ்வின் எல்லா நாட்களிலும், ஒவ்வொரு பொழுதிலும் நீர் செய்யும் நன்மைகளும், நீர் வழங்கும் ஆசிகளும், நீர் கொடுக்கும் கொடைகளும், நீர் காட்டும் இரக்கங்களும், உமது பேரன்பும் என்னை பற்றிக் கொண்டு என்னை பின்தொடர்ந்து ஊர்வலம் வருகிறது. என் ஆண்டவரின் வீட்டிற்குள் ஆண்டாண்டு காலமாய் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருப்பேன்.

( Reference Notes: Amplified Bible , The Message translation, God’s Word Translation, English Standard Version, King James Version, Tamil Original Bower Version (பரிசுத்த வேதாகமம் ), Tamil Ecumenical Common Language Version (திருவிவிலியம் ), Tamil Revised Version, Tamil Easy-to-read Version)

Thursday, January 28, 2016

பொங்குக பொங்கல்!














கசப்பு போச்சு;
இனிப்பு வந்தது.
டும் டும் டும் டும்;
டும் டும் டும் டும்.

வெறுப்பு போச்சு;
விருப்பம் வந்தது.
டும் டும் டும் டும்;
டும் டும் டும் டும்.

கோபம் போச்சு;
அன்பு வந்தது.
டும் டும் டும் டும்;
டும் டும் டும் டும்.

பாவம் போச்சு;
பாசம் வந்தது.
டும் டும் டும் டும்;
டும் டும் டும் டும்.

நோவு போச்சு;
நேசம் வந்தது.
டும் டும் டும் டும்;
டும் டும் டும் டும்.

சாவு போச்சு;
வாழ்வு வந்தது.
டும் டும் டும் டும்;
டும் டும் டும் டும்.

கவலை போக்கி,
கஷ்டம் போக்கி,
பாவம் போக்கி,
சாபம் போக்கி,
நோவு போக்கி,
சாவு போக்கி,

போக்கி போக்கி
போக்கி போக்கி
போகி போகி
போகி போகி

சிலுவை நமது போகி.
இயேசு நமது பொங்கல்.

சிந்திய இரத்தம் போகி.
உயிர்த்து எழுந்தார் பொங்கல்.

போகி போகட்டும்;
பொங்கல் வரட்டும்.
டும் டும் டும் டும்;
டும் டும் டும் டும்.

ஏழ்மை நீங்கட்டும்;
செல்வம் ஓங்கட்டும்.
டும் டும் டும் டும்;
டும் டும் டும் டும்.

பொங்கல் பொங்கட்டும்;
இயேசு தங்கட்டும்.
டும் டும் டும் டும்;
டும் டும் டும் டும்.

டும் டும் டும் டும்;
டும் டும் டும் டும்.
டும் டும் டும் டும்;
டும் டும் டும் டும்.

பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!

சடங்குகள் வேண்டாம். நம்பிக்கையே போதும். (திருச்சபை சீர்திருத்த நாள்- Church Reformation Day - Message by YesuRasigan on 31 Oct 2015)


இன்று, அக்டோபர் 31ம் தேதி. ஒவ்வொரு கிறிஸ்து தொண்டர்களுக்கும் ஓர் ஒப்பற்ற விடுதலையின் நினைவு நாள்.

நேரிடையாய் ஒருவர் செயலாற்றும்போது இணைப்பாளருக்கு இடமில்லை. வாக்குறுதி அருளியபோது, கடவுள் ஒருவரே நேரிடையாய்ச் செயல்பட்டார். (கலாத்தியர் 3 :20).

அதுவும், தம் ஒரே மகன், இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல், நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புக் கூர்ந்தார். (யோவான் நற்செய்தி 3 :16). ஆனால், தீயோன் திருச்சபை வழியாகவே கடவுளின் அன்பை கொச்சைப்படுத்தும் வகையில், சட்டங்களையும், சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் உருவாக்கி, விசுவாசிகளின் மனக்கண்களை இருட்டடிப்பு செய்தான்.

உண்மையில், மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது. (உரோமையர் 9 :16). ஏனெனில், "இயேசுவே ஆண்டவர்" என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். (உரோமையர் 10 :9).

ஆம், இதே நாள் கி.பி. 1517 ஆம் ஆண்டு, கடவுளின் அன்பையும், அவர் நமக்கு அருளிய மீட்பையும், எல்லையற்ற ஆசிகளையும், அளவற்ற கிருபையையும், ஒப்பற்ற விசுவாசத்தையும் மூடிமறைக்கும் சடங்குகளுக்கும், தேவையற்ற கொள்கைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், இடைத்தரகர்களுக்கும், மதமாச்சரியங்களுக்கும் எதிராக மார்ட்டின் லூதர் அடிகளார், மாபெரும் விசுவாச அறிக்கையை வெளியிட்ட நாள் இதுவே.

இந்த நன்னாளில், நாம் நமது நம்பிக்கையை மறுஅறிக்கை செய்வோம்.

செயல்களால் நாம் கடவுள் முன் ஏற்புடையவர் ஆவதில்லை. கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் தான் நாம் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறோம். நாம் நமது நம்பிக்கையால் நேர்மையுடையோராகி, வாழ்வடைகிறோம். (கலாத்தியர் 3 : 11 & 26 | ஆபக்கூக்கு 2:4)

நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து நமது உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே நமது வாழ்வுக்கு, ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! (எபேசியர் 3 :17)

ஆம். ஆமென். அப்படியே ஆகட்டும்.






Inspiration from: R. Stanley from the Daily devitional book called 'Better Everyday'.